வந்துவிட்டது மீன் பிஸ்கட்...குழந்தைகளுக்கு ரொம்ப நல்லது...
மக்கள் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பற்றி விழிப்புடன் இருக்கும்போது, லூதியானாவைச் சேர்ந்த மீன்வளக் கல்லூரி, மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக புரதச்சத்து அதிகம் நிறைந்த பிஸ்கட்டுகளை உருவாக்கியுள்ளது.
குரு அங்கத் தேவ் கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் மீன்வளக் கல்லூரி உதவி பேராசிரியர் அஜீத் சிங், ஊரடங்கின்போது ஏராளமான மக்கள் ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை உட்கொள்வதைப் பார்த்து அதிக புரதச்சத்து மிகுந்த பிஸ்கட்களை தயாரிக்க நினைத்தனர்.
புரதச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளில் மீன் மிக முக்கியமானது. எனவே, அஜீத் சிங் பிஸ்கட் தயாரிக்க மீன்களைப் பயன்படுத்தினார். புரதத்தைத் தவிர, இந்த மீன் பிஸ்கட்களில் அதிக நார்ச்சத்துகளும் செறிவூட்டப்படுகின்றன. இந்த பிஸ்கட்டுகளில் நார்ச்சத்துக்களைச் சேர்க்க ராகி மற்றும் ஓட்ஸ் பயன்படுத்தப்படுகின்றன. இந்த புரதச்சத்து நிறைந்த பிஸ்கட்டுகள் சாதாரண பிஸ்கட்டுகளின் அனைத்து தரத்தையும் கொண்டிருக்கின்றன. மீன் பயன்படுத்தினாலும் இந்த பிஸ்கட்களில் மீனின் துர்நாற்றம் இல்லை. இதனால் குழந்தைகள் இந்த சுவையான பிஸ்கட்டுகளை எந்தவித தயக்கமும் இல்லாமல் சாப்பிடலாம்.
இந்த தொற்றுநோய் நாம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தைப் பற்றி நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளது. தொற்றுநோய்யை எதிர்த்து போராட நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் கூறுகளில் மிக முக்கியமானது புரதம். எனவே நாம் புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பிஸ்கட்கள் குழந்தைகளுக்கு எளிதாக புரதச்சத்துக்களை கிடைக்கச் செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மீன்களில் புரதச்சத்து மட்டுமில்லாமல், வைட்டமின் டி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, ஜிங்க், அயோடின், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன. கடலில் இருந்து நமக்கு கிடைக்கும் மீன்களில் முக்கியமான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிக அளவில் நிறைந்துள்ளது. இந்த சத்தானது உடலில் வளர்சிதை மாற்றத்தை சீராக வைக்க உதவுகிறது. மேலும் நம் உடலை எடையை சீராக வைத்துக் கொள்ளவும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உதவுகிறது.
இப்படியான மீனைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த பிஸ்கட்கள் நம் ஆரோக்கியத்திற்கு உதவும் என்று கூறப்படுகிறது.