தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் முதல் பெண் கண்டக்டர் - யார் இந்த ரம்யா?
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் முதல் பெண் கண்டக்டர் என்ற பெருமையை மதுரையை சேர்ந்த பெண் ஒருவர் பெற்றுள்ளார்.
கோரிக்கை மனு
மதுரை கே.புதூர் லூர்து நகரை சேர்ந்த தம்பதி பாலாஜி - ரம்யா. இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர். பாலாஜி கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் காரைக்குடி மண்டலம் மதுரை உலகனேரி கிளையில் டிரைவராக பணியாற்றினார்.
இதனிடையே அவர் பணியில் இருந்தபோது கொரோனாவால் இறந்தார். இதனால் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் போதிய வருமானமின்றி சிரமப்பட்டுள்ளனர். இதனையடுத்து கருணை அடிப்படையில் தனக்கு வாரிசு வேலை வழங்குமாறு மனைவி ரம்யா போக்குவரத்து கழகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
மேலும், தனது குடும்ப நிலையை விளக்கி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். இந்த மனுவை பரிசீலிக்குமாறு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளார்.
முதல் பெண் கண்டக்டர்
இதனால் ரம்யாவின் கல்வித் தகுதிக்கு ஏற்ப பணி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டார். அதன்படி நேர்முகத் தேர்வு முடிந்து 14ம் தேதி ரம்யா உள்ளிட்ட 40 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கப்பட்டது.
இதையடுத்து ரம்யா நேற்று மதுரை உலகனேரி கிளையில் கண்டக்டர் பணியை ஏற்றுக் கொண்டார். மதுரை முதல் ராமேஸ்வரம் செல்லும் பேருந்தில் கண்டக்டர் பணி இவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று முதல் 10 நாட்களுக்கு பயிற்சி கண்டக்டர் என்ற அடிப்படையில் ரம்யா, தனது பணியை துவக்கியுள்ளார். இதன்மூலம், அரசு போக்குவரத்து கழக முதல் பெண் கண்டக்டர் என்ற பெருமையையும் ரம்யா பெற்றுள்ளார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.