கேரளாவில் பார்வை மாற்றுத்திறனாளி நீதிபதி ஆனார்!
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தன்யா நாதன்(வயது 24), வழக்கறிஞரான இவர் கேரளாவின் முதல் பார்வை மாற்றுத்திறனாளி நீதிபதி ஆவார்.
பிறப்பிலிருந்தே பார்வையற்றவராக இருந்த தன்யா நாதன், தர்மடோமில் உள்ள ஒரு சிறப்புப் பள்ளியில் 10-ம் வகுப்பு வரையிலும், பின்னர் பரசினிகடவு உயர்நிலைப் பள்ளி மற்றும் மொராஜா அரசு மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றார்.
தொடர்ந்து சட்டத்துறை மீது கொண்ட ஆர்வத்தால் எல்எல்பி படித்து முதலிடம் பிடித்தார். தளிப்பரம்பாவில் ஒரு வருடம் ஜூனியர் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

வழக்குகளுக்கான குறிப்புகளை பிரெய்லி முறையிலும், நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் Screen Reading சாப்ட்வேர் உதவியுடனும் படித்து வந்தார்.
கடந்தாண்டு உச்சநீதிமன்றம் பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளியை ஊனமுற்றோர் என்ற காரணமாக மட்டுமே தடை செய்ய முடியாது என தீர்ப்பளித்தது.
இதனை உத்வேகமாக எடுத்துக்கொண்ட தன்யா நாதன், நீதித்துறை சேவை தேர்வுக்கு தன்னை தயார்படுத்த முடிவெடுத்தார், இதன்படி தேர்வில் வெற்றி பெற்று மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவில் முதலிடம் பிடித்தார், விரைவில் பணிநியமனம் வழங்கப்படவுள்ளது.
தன்யா நாதனுக்கு பலரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
