இந்தியாவில் முதல் முறையாக இலவச நாப்கின் திட்டம் - 200 கோடி ரூபாய் ஒதுக்கிய ராஜஸ்தான்
பெண்கள், பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்க 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக ராஜஸ்தான் மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மம்தா பூபேஷ் தெரிவித்துள்ளார்.
இலவச நாப்கின் திட்டம்
காங்கிரஸ் தலைமையிலான் அம்மாநில அரசு அயாம் சக்தி உடான் எனும் திட்டத்தை கடந்த ஆண்டு கொண்டு வந்தது. இத்திட்டத்தில் பெண்கள், மாணவிகளுக்காக மேம்பாட்டு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக 1.20 கோடி பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின் வழங்கப்படும் எனக் கடந்த ஆண்டே அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
2022-23 பட்ஜெட்டில் இந்த திட்டத்துக்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் மம்தா பூபேஷ் தெரிவித்திருந்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு 31 மாவட்டங்களைச் சேர்ந்த 26,220 பள்ளிகள், 23 மாவட்டங்களில் உள்ள 31,255 அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றுக்கு 104.78 கோடி ரூபாய் மதிப்பில் இலவச நாப்கின் வழங்கப்பட்டதாக மம்தா பூபேஷ் கூறினார்.
இந்த ஆண்டு 33 மாவட்டங்களில் உள்ள 60361 அங்கன்வாடி மையங்கள் மூலம் 1.15 கோடி பயனாளர்களுக்கு 34,104 அரசுப் பள்ளிகளில் படிக்கும் 26.48 லட்சம் மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்குவதற்கான பணிகள் தொடங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் இலவச நாப்கின் திட்டத்திற்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறை.