உலக நாடுகளை ஓவர்டேக் செய்த துபாய் - இனி எங்கும் டிஜிட்டல், எதிலும் டிஜிட்டல் தான்..!
100 சதவீதம் காகிதமற்ற அரசாக துபாய் மாறியுள்ளது என்று அந்நாட்டின் பட்டத்து இளவரசரும், நிர்வாகக் குழுவின் தலைவருமான ஷேக் ஹாம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மேக்தம் அறிவித்துள்ளார்.
துபாயை டிஜிட்டல் நகரமாக மாற்றுவதற்கான முயற்சியை கையில் எடுத்த இளவரசர் ஷேக் ஹாம்தான் இதற்காகவே கடந்த 2018 ஆம் ஆண்டு காகிதமில்லா திட்டத்தையும் அறிவித்தார். இந்த திட்டம் 5 கட்டங்களாக செயல்படுத்தப்பட்டது.அவை ஒவ்வொன்றும் துபாய் அரசாங்கத்தின் வெவ்வேறு குழுக்களை பட்டியலிட்டன.
5வது கட்டத்தின் முடிவில் துபாயில் உள்ள 45 அரசு துறைகளும் காகிதமற்றவை என்றும், இதன் மூலம் இந்த துறைகள் 1800 டிஜிட்டல் சேவைகளை செயல்படுத்தின என்றும், இது 336 மில்லியன் ஆவணங்களை சேமித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து உலகின் முதல் காகிதம் இல்லாத அரசு என்ற பெருமையை துபாய் பெற்றுள்ளது.
இது தொடர்பாக ஷேக் ஹாம்தான் வெளியிட்ட அறிவிப்பில், இனி துபாய் உலகின் முன்னிலை டிஜிட்டல் தலைநகராக விளங்கும் என்று குறிப்பிட்டுள்ளார். காகிதப் பயன்பாடு முற்றிலும் துறக்கப்பட்டதால் அரசுக்கு 350 மில்லியன் டாலர் மிச்சமாகும். மேலும் இதன் மூலம் 14 மில்லியன் மனித வேலை நேரங்களும் மணித்துளிகளும் மிச்சமாகிறது. இதனாலும் அரசுக்கு லாபம்தான். துபாய் அரசை இனி நிர்வகிக்கப் போவது 1,800 வகையான டிஜிட்டல் சேவைகள் தான் என தெரிவித்துள்ளார்.