நாட்டின் முதல் கருணைக்கொலை வழக்கு: ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்
இந்தியாவில் முதல் முறையாக நீதிமன்ற அனுமதியோடு கருணை கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகளையும், இதய வால்வுகளையும் அவரது பெற்றோர் தானமாக கொடுத்துள்ளனர்.
2013 ஆம் ஆண்டு கல்லூரி மாணவராக இருந்தபோது விடுதியின் 4 ஆவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் கோமா நிலைக்கு சென்றார்.

கடந்த 13 ஆண்டுகளாக ஹரிஷ் ராணா கோமா நிலையில் இருந்து வந்தார். அவர், சுவாசிப்பதற்காக அவரது தொண்டையில் குழாயும், உணவிற்காக வயிற்றில் குழாயும் பொருத்தப்பட்டுள்ளன.
ஹரிஷ் ராணா தொடர்ந்து உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களின் உதவியுடனேயே வாழ்ந்துவர,அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
மகன் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார் என்று நம்பிக்கையுடன் ஹரிஷ் ராணாவின் பெற்றோர்கள் கடந்த 13 ஆண்டுகளாக அவரை பார்த்துக்கொண்டனர். வீட்டிலேயே வைத்து அவருக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் செய்த அவர்களுக்கு இப்போது வயதாகிவிட்டது.

தங்களால் இனி தங்களது மகனை பார்த்துக் கொள்ள இயலவில்லை என்று கூறி ஹரிஷ் ராணாவை கருணை கொலை செய்ய அனுமதி கோரி அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
முதல் கருணைக்கொலை
இந்த வழக்கில் ஹரிஷ் ராணாவை உயிர்காக்கும் சிகிச்சைகளை நிறுத்தி கண்ணியமான முறையில், கருணை கொலை செய்ய உச்ச நீதிமற்றம் கடந்த மார்ச் 11 ஆம் திகதி அனுமதி அளித்தது.
அதனை தொடர்ந்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று செவ்வாய்க்கிழமை அவரது உயிர் பிரிந்த நிலையில், சோகத்திலும் ஒரு உன்னதமான செயலை அவரது குடும்பத்தினர் செய்துள்ளனர்.
ஹரீஷ் ராணாவின் கருவிழிகளையும், இதய வால்வுகளையும் அவரது பெற்றோர் தானமாக கொடுத்துள்ளனர். நாடு முழுவதும் ராணாவின் மரணத்துக்கு இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், கடுமையாக துக்கத்திலும் ராணாவின் பெற்றோர் செய்திருக்கும் இந்த உணர்வுபூர்வ தானத்துக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றது.