கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத முதல் தமிழக சட்டமன்றம்
தமிழகத்தின் 16வது சட்டப்பேரவை இன்று பதவியேற்றுக் கொண்டது. திமுக கூட்டணியில் 159 எம்.எல்.ஏக்களும் அதிமுக கூட்டணியில் 75 எம்.எல்.ஏக்களும் உள்ளனர்.
திமுக தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சியைப் பிடிக்க அதிமுக 66 எம்.எல்.ஏக்களுடன் எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறது. தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆதிக்கம் குறைந்துவிடவில்லை, இருதுருவ அரசியல் தான் தமிழகத்தின் யதார்த்தம். மூன்றாவது அணி அல்லது தேசிய கட்சி போன்ற மாற்றுகளுக்கு தமிழக மக்கள் இன்னும் தயாராகவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் உணர்த்தியிருக்கின்றன.
இந்தத் தேர்தலைப் போல கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் ஐந்து முனை போட்டி நிலவியது, ஐந்து முதல்வர் வேட்பாளர்கள் களத்தில் நின்றனர். ஆனால் இருபெரும் திராவிட கட்சிகளின் கூட்டணி மட்டுமே கணக்கை துவங்கின. மாற்று அணிகளால் ஒரு எம்.எல்.ஏ கூட பெற முடியவில்லை.
கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட இருபெரும் அரசியல் தலைவர்கள் இடம்பெறாத முதல் சட்டப்பேரவையாக இது அமைந்துள்ளது. 1957-ம் ஆண்டு முதல் முறையாக எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாநிதி இதுநாள் தோல்வியே சந்திக்காதவர். தான் போட்டியிட்ட 13 சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றிக்கனியை சுவைத்த சாதனைக்கு சொந்தக்காரர். 1984-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதி போட்டியிடவில்லை.
[CA6GCR[
1989-ல் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாகப் பிரிந்து தேர்தலைச் சந்தித்து. அப்போது முதல் முறையாக எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்ட ஜெயலலிதா அதிமுகவையும் தன்வயப்படுத்திக் கொண்டார். 1991-ல் முதல்வரும் ஆனார். ஆனால் 1996-ல் நடைபெற்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தார்.
அப்போதிலிருந்து திமுக, அதிமுக என மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. 2016 சட்டமன்றத் தேர்தலில் நூலிழையில் வெற்றியைத் தவறிவிட்டது திமுக. எம்.ஜி.ஆருக்குப் பிறகு இரண்டாவது முறையாக ஜெயலலிதா தொடர்ந்து ஆட்சி அமைத்தார். ஆனால் ஒரு சில மாதங்களிலே உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டிசம்பர் மாதம் உயிரழந்தார். அதன் பிறகு வயது முதுமையால் கருணாநிதியாலும் செயல்பட முடியவில்லை. பின்னர் 2018-ம் ஆண்டு கருணாநிதியும் மறைந்தார்.
கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் தமிழகம் சந்தித்த முதல் தேர்தலும், சந்திக்கும் முதல் சட்டப்பேரவையும் இதுவே. அடுத்த தலைமுறை தலைமை வந்துவிட்ட நிலையில் தமிழக அரசியல் பரப்பின் மீது திராவிட கட்சிகளின் ஆதிக்கம் தொடர்ந்து நீடிக்குமா என்பதே இனிவரும் காலங்களில் தமிழக அரசியல் பயணிக்கும் திசையாக இருக்கும்.