அந்த உயிர காப்பாத்துன மனசு இருக்கே அதுதான் கடவுள் : குரங்கிற்கு முதலுதவி செய்து காப்பாற்றிய ஓட்டுநர்... வைரலாகும் வீடியோ
நாய்கள் கடித்ததில் காயமடைந்து உயிருக்கு போராடிய குரங்கிற்கு முதலுதவி செய்து காப்பாற்றிய ஓட்டுநருக்கு பாரட்டுக்கள் குவிந்து வருகின்றன.
பெரம்பலூர் மாவட்டம், ஒதியம் கிராமத்தில் கடந்த 9ம் தேதி ஓட்டுநர் பிரபு என்பவர் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது குரங்கு ஒன்றை , தெரு நாய்கள் சில விரட்டி கடித்துள்ளன. படுகாயமடைந்த குரங்கு தன்னை காப்பாற்றிக்கொள்ள மரத்தின் மீது ஏறி மயங்கியுள்ளது. இதனைப் பார்த்த பிரபு சற்றும் தாமதிக்காமல், குரங்கை தன் நண்பரின் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பாதி வழயில் குரங்கு தலை துவண்டு விழுந்துள்ளது. மேலும் மூச்சு விடுவதையும் நிறுத்தியுள்ளது. குரங்கின் ஆபத்தன நிலையை உணர்ந்த பிரபு, உடனடியாக வாகனத்தை நிறுத்தி முதலுதவி அளித்துள்ளார்.
குரங்கின் நெஞ்சு பகுதியை கையால் அழுத்தி, காப்பாற்ற முயன்றிருக்கிறார். இருப்பினும் குரங்கு கண் விழிக்கவில்லை. எவ்வித அசைவும் ஏற்படாததால், குரங்கு என்றும் பாராமல் அதன் வாயோடு, தன் வாயை வைத்து ஊதினார்.அவர் தொடர்ந்து ஊதிய நிலையில், குரங்கு கண் விழித்து பார்த்தது
இதனையடுத்து, கண்கலங்கி உயிர் வந்துருச்சு…உயிர் வந்துருச்சு…வண்டிய ஹாஸ்பிட்டலுக்கு விடு என தன் நண்பரிடம் கூறுகிறார் பிரபு. பின்னர் குரங்கை பெரம்பலூர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று, காப்பாற்றியுள்ளார்.
மேலும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து குரங்கை ஒப்படைத்துள்ளார். குரங்கிற்கு உதவி செய்யும் 38 வயது நிரம்பிய பிரபுவின் இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவருக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.