Monday, May 12, 2025

இருசக்கர வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்ட பட்டாசு வெடித்து 2 பேர் உடல் சிதறி பலி

Fire Works Explode 2 killed body scattering
By Thahir 4 years ago
Report

புதுச்சேரி மாவட்டம் அரியாங்குப்பத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் பட்டாசுகளை ஏற்றிச்சென்றபோது பட்டாசு வெடித்ததில் 7 வயது சிறுவன் உட்பட இரண்டு பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

புதுச்சேரி மாவட்டம் அரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் கலைநேசன். இவர் இருசக்கர வாகனத்தில் தனது 7 வயது மகன் பிரதீசுடன் நாட்டு பட்டாசுகளை எடுத்துக்கொண்டு விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கோட்டகுப்பம் பகுதிக்கு கொண்டு சென்றுகொண்டிருந்தார்.

அவர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்றுகொண்டிருந்தபோது பட்டாசுகள் வெடித்ததில் வாகனம் வெடித்து இருவரும் உடல் சிதறி உயிரிழந்தனர்.

இதனால் அருகிலிருந்த வாகனங்களும் முழுவதுமாக சேதமடைந்தன. எதிராக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் படுகாயமடைந்ததில் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் புதுச்சேரிலிருந்து சென்னை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 2 மணிநேரத்துக்கும் அதிகமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இருவரின் உடல்களும் பல மீட்டர் தூரத்திற்கு சிதறிக்கிடந்ததால் வாகன எண்ணை வைத்தே போலீசார் இருவரையும் அடையாளம் கண்டுள்ளனர்.

அருகிலிருந்த லாரி உட்பட பல வாகனங்களும் பலத்த சேதமடைந்துள்ளதால் பட்டாசுகளுக்குள் நாட்டு வெடிகுண்டு ஏதேனும் கொண்டுவந்தாரா என்பது குறித்து விழுப்புரம் மற்றும் புதுச்சேரி போலீசார் தடவியல் துறையினர் உதவியோடும், சிசிடிவி காட்சிகளை வைத்தும் விசாரணை நடத்திவருகின்றனர்.