தீபாவளி கொண்டாட்டம்... சரவெடிக்கு தடை : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

supremecourt diwali2021 deepavali2021 fireworkscase
By Petchi Avudaiappan Oct 29, 2021 05:23 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

அனைவரும் பட்டாசு வழக்கில் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளை பின்பற்றுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நவம்பர் 4 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக  தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும், அதிக ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம்  கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

இதற்கிடையில் பட்டாசுக்கு தடை விதிக்கக் கோரியும், பட்டாசு வெடிக்கும் கால அளவை அதிகரிக்க கோரியும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, பசுமை பட்டாசு தயாரிப்பில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை என பட்டாசு உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நபரின் மகிழ்ச்சிக்காக பிறரின் உடல் நலத்தையும், உயிரையும் பாதிக்கும் பட்டாசுகளை அனுமதிக்க முடியாது எனக் கூறினர். மக்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டவே நீதிமன்றம் உள்ளது என்று தெரிவித்த நீதிபதிகள், விதி மீறல் இல்லை என்ற பட்டாசு உற்பத்தியாளர்களின் கூற்று முற்றிலும் தவறானது என்றும் விதி மீறல் தொடர்பான ஆய்வு முடிவுகளும் உள்ளது என்றும் கூறி வழக்கை இன்று ஒத்தி வைத்தனர். 

இந்நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது பட்டாசு வழக்கில் ஏற்கனவே உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகளை அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

மேலும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி தடை செய்யப்பட்ட பட்டாசுகளை கொண்டாட்டம் என்ற பெயரில் அனுமதிக்கக் கூடாது என்று நீதிபதிகள் வலியுறுத்தினர். மேலும் இந்த உத்தரவை பொறுத்தவரை, குறிப்பாக முதியவர்கள், குழந்தைகளின் சுகாதார நலனை மீறுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை, அதே நேரம் பட்டாசு வெடிப்பதை முழுமையாக தடை செய்யவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ள நீதிபதிகள், தடை செய்யப்பட்ட பட்டாசுகளுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளனர். 

மேலும் ‘பேரியம் நைட்ரேட்’ ரசாயணம் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டாசுகளுக்கும், சரவெடி பட்டாசுகளுக்கும் உச்சநீதிமன்றம்  ஏற்கனவே தடை விதித்துள்ளதை நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த உத்தரவுகளை மீறினால் அந்தந்த மாநில தலைமைச் செயலாளர் அல்லது உள்துறை செயலாளர் அல்லது மாநகராட்சி போலீஸ் கமிஷனர் அல்லது காவல்நிலைய பொறுப்பு அதிகாரி உள்ளிட்டோர் மீது தனிப்பட்ட முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.