வீட்டில் பட்டாசு தயாரித்த 5 வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழப்பு!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, தாயில்பட்டி கலைஞர் காலனியில் சட்டவிரோதாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட போது விபத்தில் சிக்கி பெண் உட்பட மூவர் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சாத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் 800 க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள், மத்திய வெடி பொருள் கட்டுப்பாட்டுத் துறை உரிமம் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்று இயங்கி வருகின்றன. நேரடியாகவும் மறைமுகமாகவும் 5 லட்சம் பேர்க்கு வாழ்வாதாரமாக உள்ள இந்தப் பட்டாசு தொழில், மத்திய அரசின் கடுமையாக்கப்பட்ட சட்ட திட்டங்களால் கடந்த சில ஆண்டுகளாக கடும் சரிவை சந்தித்து வருகிறது.
இதனால், பட்டாசு தயாரிக்கும் மூலப் பொருட்களை கள்ளச் சந்தையில் வாங்கி, தங்களது வீடுகளில் வைத்து பட்டாசு தயாரிப்பில் சட்ட விரோதமாக சிலர் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. மாவட்டத்தின் ஒதுக்குப் புற ஊராட்சிகளான தாயில்பட்டி மற்றும் வெம்பக் கோட்டையில் ஜரூராக சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு நடைபெற்று வருகிறது. இன்று காலை தாயில்பட்டி கலைஞர் காலனியில், சூர்யா என்பவர் தனது வீட்டில் வைத்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட போது, வெடி பொருளில் உராய்வு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டதில் அவரது வீடு உட்பட மூன்று வீடுகள் தரைமட்டமானது.
இதில் பட்டாசு தொழிலாளர்கள் கற்பகம் என்ற பெண்மணி,செல்வமணி,மற்றும் பக்கத்து வீட்டில் இருந்த சல்மான் என்ற 5 வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்தனர்.
வீட்டின் உரிமையாளர் சூர்யா, மற்றும் இருவர் படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனை தீக்காய சிகிச்சைப் பிரிவில் உயிர்க்குப் போராடி வருகின்றனர்.
இந்த சம்பம் பற்றி வெம்பக் கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.