பட்டாசு ஆலை வெடி விபத்து ; 10 பேர் உயிரிழப்பு - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
வெடி விபத்து
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் அமைந்திருக்கும் பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. அதில் சிக்கி 10க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 10 ஆக அதிகரித்துள்ளது. 5 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உட்பட 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
முதல் கட்டமாக விஜயகுமார், ரமேஷ், காளீஸ்வரன், முத்து, ஆவுடையம்மாள், லட்சுமி ஆகிய 6 பேர் மட்டுமே அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விபத்தில் உடல் கருகி இறந்த 3 பெண்களின் அடையாளம் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில், உறவினர்களின் உதவியோடு 3 பெண்களை போலீசார் அடையாளம் கண்டுபிடித்தனர்.
ஸ்டாலின் இரங்கல்
இந்த கோரவிபத்து குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், கீழதிருத்தங்கல் கிராமத்தில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் எதிர்பாராதவிதமாக, ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உட்பட 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, காயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள், தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.