உதகை அருகே தீ விபத்து - போராடி அணைத்த தீயனைப்பு துறையினர்
உதகை அருகே தீட்டுக்கல் பகுதியில் அமைந்துள்ள உதகை நகராட்சிக்கு சொந்தமான மறு சுழற்சி கழிவுகள் சேகரிப்பு மைய கிடங்கில் பயங்கர தீ விபத்து. சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன. இதில் உதகை நகராட்சிக்கு சொந்தமான மறு சுழற்சி கழிவுகள் சேகரிப்பு மையமானது உதகை அருகே திட்டுக்கல் பகுதியில் உள்ளது.
நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் திட்டுக்கல் குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது. பின்னர் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், இரவு சுமார் 7 மணி அளவில் குப்பை சேகரிப்பு மையத்திலுள்ள எந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக தீ மளமளவென பரவி பயங்கர தீயாக உருமாறியுள்ளது.
தகவலறிந்த உதகை தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ரவிக்குமார் தலைமையில், 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு சென்று, 10-க்கும் மேற்பட்ட தண்ணீர் வாகனங்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்து சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும் தீயணைப்பு துறையினர், நகராட்சி ஊழியர்கள் மற்றும் தனியார் தண்ணீர் லாரி ஓட்டுநர்கள் ஆகியோர் விரைந்து செயல்பட்டனர். இந்த தீ விபத்தினால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.