பெற்றோர்களின் அலட்சியத்தால் விபரீதம் - தீயில் கருகி உயிரிழந்த 2 வயது குழந்தை - அதிர்ச்சி சம்பவம்
சென்னை பல்லாவரம், பொழிச்சலூரைச் சேர்ந்தவர் மோகன். இவருடைய மனைவி சங்கீதா. இத்தம்பதிக்கு பிரஜீதா என்ற 2 வயதில் பெண் குழந்தை இருந்தது. இவர்கள் இருவரும் பூ வியாபாரம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று மாலை மோகன் வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து, அறையில் 2 வயது குழந்தையை தூங்க வைத்து அறையில் தனியாக படுக்க வைத்துள்ளார்.
இதனையடுத்து, ஏசியை நன்றாக ஆன் செய்து விட்டு, அறையின் கதவை மூட்டிவிட்டு சங்கீதா வீட்டு வாசலில் அமர்ந்து பூக்கட்டிக் கொண்டிருந்தார்.
சிறிது நேரம் கழித்து பூட்டப்பட்ட அறை கதவின் இடுக்கியிலிருந்து புகை வெளியேறிக்கொண்டிருந்தது. புகை அதிகமாகி வீட்டு வாசலில் வரத் தொடங்கியது. புகை வாடை வந்ததும், சங்கீதா திரும்பி வீட்டை பார்த்துள்ளார்.
அப்போது, வீடு முழுவதும் புகை மண்டலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, குழந்தையை மீட்க சங்கீதா பூட்டப்பட்ட அறைக் கதவைத் திறந்து பார்த்தார்.
கதவுக்கு மேற்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த ஸ்பிலிட் ஏசி இயந்திரம் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருந்தது. இதனால், சங்கீதாவால் உள்ளே செல்ல முடியவில்லை. சிறிது நேரத்தில் அந்த அறை முழுவதும் பளபளவென தீப்பிடித்து பற்றி எரிந்தது.
அறையில் சிக்கிக்கொண்ட 2 வயது குழந்தை உடலில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்ட, சிறிது நேரத்தில் குழந்தையின் அழுகை சத்தம் காணாமல் போனது.
இது குறித்து போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைத்தனர்.
உள்ளே சென்று குழந்தையை பார்த்த போது, தீயில் கருகி பிரஜீதா இறந்து கிடந்தார். குழந்தையை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கடந்த சில நாட்களாக ஏசி இயந்திரத்தின் மின் சுற்றில் கோளாறு இருந்ததால், தீப்பற்றியது என்று விசாரணையில் தெரியவந்தது. ஏசி இயந்திரத்தை முறையாக பராமரிக்கப்படாததால் ஏசியில் மின் கசிவு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.