பட்டாசு கடை தீ விபத்து: 3 பேர் பரிதாப மரணம்
வேலூர் மாவட்டம் லத்தேரியில் பட்டாசுக்கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், கடை உரிமையாளர் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் லத்தேரி பேருந்து நிலையம் பகுதியில் மோகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை உள்ளது. இந்த பட்டாசு கடையில் இன்று மதியம் தீடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீ மளமளவென பற்றி எரிந்து பரவியதுடன், கடையில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியன, இதனால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.
உடனடியாக தீயணைப்பு துறைக்கு மக்கள் தகவல் கொடுத்த போதும், பொது மக்கள் தண்ணீரை கொண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து, சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் கடை உரிமையாளர் மோகன் மற்றும் அவரது 2 பேரன்கள் தீக்காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவர்களின் உடல்களைமீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.