எஸ்.பி.வேலுமணி மிகப்பெரிய சக்தியாக இருப்பதால்தான் ஐடி ரெய்டு நடத்துகிறது திமுக : கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன்
கோவை எஸ்.பி.வேலுமணி மிகப்பெரிய சக்தியாக இருப்பதால் அதை உடைக்க இது போன்ற சோதனைகளை செய்து வருவதாக கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவர் தொடர்புடையவர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இதனிடையே, அவரது வீட்டின் முன்பு ஏராளமான அதிமுக தொண்டர்கள் திரண்டுள்ளனர்.
பெண்கள் பலர் எஸ்.பி.வேலுமணி வீட்டு வாசலிலேயே அமர்ந்துள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது, இதனிடையே எம்எல்ஏக்கள் அம்மன் அர்ஜுனன் பொள்ளாச்சி ஜெயராமன் சூலூர் கந்தசாமி அமுல் கந்தசாமி ஆகியோரும் அங்கு திரண்டுள்ளனர்.
தொடர்ந்து எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க தான் வெற்றி பெற்றது. அதனை மாற்றி விட்டனர். இதனை மறைப்பதற்காக லஞ்ச ஒழிப்பு துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். கோவைக்கு மிகப்பெரிய சக்தி முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி முடியாது என்பது தற்போதுள்ள அமைச்சர்களுக்கு தெரியும்.
அதை உடைப்பதற்காக இதுபோன்ற லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். சாதாரண தொண்டர்கள் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை செய்கின்றனர். இதனால் நாங்கள் பயந்து விடுவோம் என்று நினைக்கிறார்கள்.
நாங்கள் ஒருபோதும் பயப்பட மாட்டோம். விழுந்து விட மாட்டோம். அ.தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என நினைப்பவர்கள் அவர்கள் தான் வீழ்ந்து போவார்கள். 9 அதிகாரிகள் இவ்வளவு நேரம் சோதனை நடத்த என்ன இருக்கிறது.
3 மாதங்களுக்கு முன்பு தான் சோதனை நடத்தினர். தற்போது மீண்டும் சோதனை செய்ய அவசியம் என்ன? திமுக தானே ஆட்சியில் உள்ளது. இப்போது நாங்கள் எப்படி தவறு செய்ய முடியும் என கூறினார்