“ஊருக்கு தான் உபதேசம் எல்லாம்” ... விடிய விடிய பார்ட்டி கொண்டாடிய பிரதமர் - அதிர்ச்சியில் பொதுமக்கள்
பின்லாந்து நாட்டு பிரதமர் சன்னா மரீன் கொரோனா கட்டுப்பாடுகளை மறந்து விடிய விடிய பார்ட்டியில் கலந்து கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பின்லாந்து நாட்டு வெளியுறவு அமைச்சர் பெக்கா ஹவிஸ்டாவுக்கு கொரோனா உறுதியானதால் சக அமைச்சர்கள் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இதனிடையே தலைநகர் ஹெல்சிங்கியில் உள்ள நைட் கிளப்புக்கு சனிக்கிழமை இரவு சென்ற பின்லாந்து நாட்டின் பிரதமராக இருக்கும் 36 வயதான சன்னா மரீன் அங்கு இரவு முழுவதும் விடிய விடிய பார்ட்டி செய்துள்ளார்.
அதிகாலை 4 மணி வரை பார்ட்டி நடந்துள்ள நிலையில் இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பின.கொரோனா கட்டுப்பாடுகளை பிரதமரே காற்றில் பறக்க விட்டது நியாயமா என்று விமர்சனங்கள் எழுந்ததால் கடும் நெருக்கடிக்கு சன்னா மரீன் ஆளானார்.
இந்நிலையில் நானும் எனது கணவரும் சாப்பிடுவதற்காக வெளியில் போயிருந்தோம். அப்படியே ஷாப்பிங் போனோம். நண்பர்களைச் சந்தித்தோம். நைட் கிளப்பில் கொஞ்ச நேரம் செலவழித்தோம்.கொரோனா பாசிட்டிவ் உள்ள நபருடன் நான் எக்ஸ்போஸ் ஆகியிருந்தாலும் கூட எனக்கு தனிமைப்படுத்தல் தேவைப்படவில்லை என்று ஒரு அதிகாரி கூறியிருந்தார்.
அதனால்தான் நான் பார்ட்டியில் கலந்து கொண்டேன். ஆனால் விதிகளை மீறிய செயல் இது என்று உணர்ந்துள்ளேன். இதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், ஸாரி என்று நாட்டு மக்களிடம் சன்னா மரீன் கூறியுள்ளார். இதுதொடர்பாக டிவி சானல்களில் கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டதில், மூன்றில் இரண்டு பங்கு பேர் மரீனுடைய செயல் மிகப் பெரிய தவறு என்று கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.