பணப்பறிப்பில் ஈடுப்பட்ட பலே பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்!

Madurai Financial Fraud Lady Police
By Thahir Jul 29, 2021 06:46 AM GMT
Report

டெய்லர் அர்ஷத் என்பவரிடம் ரூபாய் பத்து லட்சம் பணம் பறித்து மோசடியில் ஈடுபட்டதாக, மாவட்டக் குற்றப் பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கில், மதுரை நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வசந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம், மதுரை காவல்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பணப்பறிப்பில் ஈடுப்பட்ட பலே பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்! | Financial Fraud Lady Police

சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியைச் சேர்ந்தவர் அர்ஷத். மதுரை வில்லாபுரம் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக, ரெக்ஸின் பேக் தயார் செய்யும் கம்பெனியில் டெய்லராகப் பணிபுரிந்து வந்த அவர், தனது சொந்த ஊரில் பேக் தயாரிப்பு தொழில் தொடங்க முடிவு செய்தார். அதற்காக ரூபாய் பத்து லட்சம் வரை தெரிந்த நபர்களிடம் பணம் புரட்டிய அவர்க்கு கூடுதல் பணம் தேவை ஏற்பட்டது. இதனை அறிந்து திருமங்கலம் பாண்டி என்பவர், அர்ஷத்தை அணுகி, தேனி மாவட்டத்தில் பணம் இரட்டிப்பாக்கும் நபர்களிடம் சென்று, பணத்தை கூடுதலாக தருவதாக ஆசை வார்த்தைக் காட்டியுள்ளார்.

அவரை நம்பி, கடந்த ஜூலை 5 ந் தேதி மதியம், ஒரு காரில் பாண்டி, சிலைமான் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் செட்டியார் ஆகியோருடன் தேனிப் புறப்பட்டுச் செல்லும் வழியில், மதுரை புறநகர் நாகமலைப் புதுக்கோட்டையில் காரை நிறுத்தினர். சில டாக்குமெண்ட்ஸ் தயார் செய்ய வேண்டும் என, அர்ஷத்தை காரில் காத்திருக்கச் சொல்லி விட்டு, மூவரும் புறப்பட்டுச் சென்றனர்.

சிறிது நேரம் கழித்து கார்த்திக் காரில் வந்து ஏறிக் கொள்ள, பாண்டி வெளியே நின்ற போது, நாகமலை புதுக்கோட்டை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி தனது ஜீப்பில் வந்து இறங்கி, விசாரணை என்ற பெயரில் மூவரையும் ஜீப்பில் ஏற்றிச் சென்றுள்ளார். வழியில் அர்ஷத் கையில் இருந்த பணப் பேக்கை பிடுங்கி, டிரைவரிடம் கொடுத்த இன்ஸ்பெக்டர் வசந்தி, அவரை மட்டும் சிறிது தூரத்தில் ஜீப்பை விட்டு இறக்கி விட்டு, பாண்டி, கார்த்திக்குடன் சென்றுவிட்டார்.

அதிர்ச்சியில் உறைந்த அர்ஷத் காவல் நிலையம் சென்று சந்திக்க, சில நாட்களாக அலைக்கழித்த அவர், ஒரு கட்டத்தில்,"உன் பேக்கில் பணம் எங்கே இருந்தது? நோட்புக் தான் இருந்தது", எனச் சொல்லி அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார். தொடர்ந்து நேரிலும், போனிலும் நச்சரித்த அர்ஷத்திடம், "கஞ்சா கேஸ் போட்டு உள்ளே தள்ளி விடுவேன்", என மிரட்ட, மதுரை மாவட்ட எஸ்.பி. பாஸ்கரனிடம், சிலர் உதவியோடு புகார் செய்தார் அர்ஷித்.

ஏடிஎஸ்பி சந்திரமெளலி விசாரணையில், புகாரில் உண்மை முகாந்திரம் தென்பட, மாவட்டக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் விசாரணைக்கு அனுப்பி வைத்தார். குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணையில் இன்ஸ்பெக்டர் வசந்தி, பணம் இரட்டிப்பாக்கும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததும், அர்ஷத்திடம் பத்து லட்சம் பணத்தைப் பிடுங்கி அலைக்கழித்ததும் உண்மை எனத் தெரிய வந்ததை தொடர்ந்து, பண மோசடி, மிரட்டல் பிரிவுகளின் கீழ் இன்ஸ்பெக்டர் வசந்தி, பாண்டி, கார்த்திக், செட்டியார் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து குற்றவியல் நீதித்துறை நடுவர் விசாரணைக்கு முதல் தகவல் அறிக்கையை நேற்று அனுப்பி வைத்துள்ளார் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் சுதந்தராதேவி.

இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வசந்தியை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவிட்டு உள்ளார். இன்ஸ்பெக்டர் வசந்தி திண்டுக்கல்லில் பணியில் இருந்த போது, வழக்கறிஞர் ஒருவரைத் தாக்கிய வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத் தக்கது. பணம் இரட்டிப்பாக்கும் கும்பலுடன் தொடர்பில், பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் பணப்பறிப்பு மோசடியில் ஈடுபட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.