நிதியமைச்சரின் பொருளாதார ஆய்வறிக்கையில் திருக்குறள்
கொரோனா பேரிடருக்குப் பின்னர் இந்த வருடம் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி செய்ததால், பிப்ரவரி 1ஆம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். இந்த நிலையில் 2020-21ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

பட்ஜெட் தாக்கலின் முன்னோட்டமாகப் பார்க்கப்படும் இந்த ஆய்வறிக்கையில், பொருள் செயல் வகை அதிகாரத்திலிருந்து (753) திருக்குறள் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.
விளக்கம்:
பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்துவிட்டால் நினைத்த இடத்துக்குச் சென்று இருள் என்னும் துன்பத்தைத் துரத்தி விட முடியும் என்பதே இக்குறளுக்கான விளக்கம் என்று கூறப்பட்டுள்ளது.
குறளுக்கேற்றாற் போல நாட்டில் நிலவுமபிரச்சினைகளுக்குத் தீர்வாக தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட் இருக்குமா என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.