AI செயலிகளை பயன்படுத்த வேண்டாம்; எச்சரிக்கும் மத்திய அரசு - பின்னணி என்ன?
AI செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என மத்திய நிதியமைச்சகம் ஊழியர்களை எச்சரித்துள்ளது.
AI செயலிகள்
நவீன தொழில்நுட்ப யுகத்தில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கல்வி முதல் வணிகம், உற்பத்தி, ஐடி, மருத்துவம் என அனைத்து துறைகளிலும் ஏஐ தனது கால்தடத்தை பதித்து வருகிறது.
ChatGPT, DeepSeek, Gemini போன்ற AI செயலிகளை பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். பயனர்களின் சந்தேகங்களுக்கு பதில் வழங்குவதோடு, கோடிங் எழுதுவது, படங்களை உருவாக்கி தருவது போன்ற பல்வேறு செயலிகளை இந்த AI செயலிகள் செய்கின்றன.
நிதியமைச்சகம் தடை
இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் தங்களது அலுவலக கணினிகள் மற்றும் மின்னணு சாதனங்களில் ChatGPT, DeepSeek போன்ற AI கருவிகள் மற்றும் செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
நிதி அமைச்சக இணைச் செயலாளர் பிரதீப் குமார் சிங் வெளியிடப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையானது, வருவாய், பொருளாதார விவகாரங்கள், செலவினம், பொது நிறுவனங்கள் மற்றும் நிதி சேவைகள் போன்ற அரசுத் துறைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
ரகசிய தரவுகள்
இந்த செயலிகள் மூலம் அரசின் ரகசிய தரவுகள் மற்றும் ஆவணங்களுக்கு கசிய வாய்ப்பு உள்ளதால் இந்த செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக இத்தாலி ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ChatGPT தயாரிப்பாளரான Open AI நிறுவனத்தின் தலைவர் சாம் ஆல்ட்மேன் இன்று, இந்தியா வரவுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.