3 லட்சத்து 50 ஆயிரம் காலி இடங்கள் உள்ளன - TNPSC குறித்து முக்கிய தகவலை அறிவித்த நிதி அமைச்சர்
அரசு பணிகளில் 3 லட்சத்து 50 ஆயிரம் காலி இடங்கள் இருப்பதாக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடியது.பிற்பகல் பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மீதான மானிய கோரிக்கை நடைபெற்றது.
அப்போது, கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஸ்குமார், கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையப் பயிற்சி மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்,
அரசு பணிகளில் 3 லட்சத்து 50 ஆயிரம் காலி இடங்கள் இருப்பதாகவும், பல்வேறு இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்தாலும் இன்னும் முழுமையாக ஆய்வு செய்யவேண்டியதுள்ளது என்றார்.
இதற்கு நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆய்வு மேற்கொண்டு வரும் இந்த குழுவுடன் முதற்கட்ட ஆலோசனையும் நடைபெற்று முடிந்துள்ளாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்த குழு 6 மாதத்தில் பரிந்துரைகளை தரவும் திட்டமிட்டுள்ளதாகவும், நிதி முக்கியதுவம் என்றாலும், மனிதவளமும் முக்கியம் என்று கருதி முதலமைச்சர் செயல்பட்டுவருவதாக நிதி அமைச்சர் தெரிவித்தார்.
எனவே இந்த ஆய்வு முடியும் போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அடிப்படை கட்டமைப்பே சீரமைக்கப்படும் என்றார். அப்போது காங்கிரஸ் உறுப்பினர் கோரிக்கையும் பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.