திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும்; மக்களுக்கு அனுமதி இல்லை - நீதிமன்றம் உத்தரவு
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என மேல்முறையீட்டு மனுவில் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார், மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கார்த்திகை தீப திருவிழா அன்று தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.

ஆனால், சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி, வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே தீபம் ஏற்றப்பட்டது.

தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் முருகன் கோவில் செயல் அலுவலர், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகர காவல் ஆணையர், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன், இன்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும்
மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவு செல்லும் எனவும், மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

நீதிபதிகள் வெளியிட்ட தீர்ப்பில், "கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றுவதால் பொது அமைதி சீர்குலையும் என்பது அபத்தமானது. அரசியல் காரணங்களை அடிப்படையாக கொண்டு அரசியல் செயல்படக்கூடாது. திருப்பரங்குன்றத்தில் பொது அமைதிக்கும் பாதிப்பு ஏற்படும் என்றால் அதற்கு அரசே காரணம்.
மலையில் உள்ள தீபத்தூண் கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் உள்ளது. மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்திருவிழாவின் போது தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும்.
தீபம் ஏற்றும் நிகழ்வின் போது, பொது மக்கள் மலைக்கு செல்ல அனுமதி இல்லை. தீபம் ஏற்ற யாரை அனுமதிக்கலாம் என காவல்துறை, தொல்லியல் துறை மற்றும் தேவஸ்தானம் முடிவு செய்யலாம்" என கூறி வழக்கை முடித்து வைத்தது.