13 பேரைச் சுட்டுக்கொன்ற காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் - வைகோ

Stalin Vaiko Sterlite Vedanta
By mohanelango May 21, 2021 07:23 AM GMT
Report

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். நாளை இதன் மூன்றாம் ஆண்டு நினைவு கடைபிடிக்கப்படுகிறது.

இந்த சமயத்தில் துப்பாக்கிச் சூட்டில் சம்மந்தப்பட்டுள்ள காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டை உலுக்கிய அந்த நிகழ்வு நடந்து, மூன்று ஆண்டுகள் ஆகின்றன. ஆம்; நாளை மே 22. 2018 ஆம் ஆண்டு, இதே நாளில்தான், தூத்துக்குடியில் 13 அப்பாவித் தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்கள்.அவர்கள் செய்த தவறு என்ன? தூத்துக்குடி சுற்றுச் சூழலைக் கெடுக்கின்ற ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, அறவழியில் அணிவகுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்றதுதான்.

வழியில் அவர்களை மறித்த காவல்துறையினர், சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு, வெறியாட்டம் ஆடினர். பொதுமக்களை நோக்கிச் சுட்டனர். ஜான்சி, ஸ்னோலின் என்ற இரு பெண்கள் உட்பட, 13 பேர் குண்டடிபட்டுச் செத்தனர். அவர்களுடைய மூளை தெறித்து மண்ணில் விழுந்தது.

13 பேரைச் சுட்டுக்கொன்ற காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் - வைகோ | File Murder Case Against Police Sterlite Vaiko

தமிழ்நாட்டில் இதுவரை நடக்காத கொடுமை அது. ஸ்டெர்லைட் ஆலை முதலாளிக்கு, அண்ணா தி.மு.க. ஆட்சியாளர்கள் குற்றேவல் புரிந்ததன் விளைவாகத்தான் அந்த 13 உயிர்கள் பலியாகின. அவர்களைச் சுட்டுக்கொன்ற அந்தக் குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற அப்பாவி வணிகர்களை அடித்துக் கொன்ற காவல்துறையினர் மீது, கொலைக் குற்ற வழக்குp பதிவு செய்து, கைது செய்ய வேண்டும் என நான் அறிக்கை விடுத்தேன். அதன்படியே, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர். வழக்கு நடைபெறுகின்றது.

அதுபோல, ஸ்டெர்லைட் ஆலைக்காக, 13 பேரைச் சுட்டுக்கொன்ற காவலர்கள் மீதும், கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவர்களைக் கைது செய்ய வேண்டும். அப்பொழுது தான், இறந்தவர்களுக்கு நீதி கிடைக்கும். தூத்துக்குடி மண்ணையும் மக்களையும் காக்க, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடி, தங்கள் இன்னுயிர்களை ஈந்த போராளிகளுக்கு, வீர வணக்கம் செலுத்துவோம்!” என்றுள்ளார்.