மதுரையில் பரபரப்பு - பாஜகவினரை ஓட ஓட விரட்டி அடித்த விசிகவினர் 50 பேர் மீது வழக்குப் பதிவு!
சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா நாடு முழுவதும் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்வேறு அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பலரும் தனது சமூகவலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், மதுரை அருகே தல்லாகுளத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் வருகை தந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதாக தகவல் வெளியானது. இதனால் அங்கு ஏராளமான விசிக தொண்டர்கள் கூடியிருந்தனர். அந்த நேரத்தில் பாஜக முன்னாள் புறநகர் மாவட்டச் செயலாளர் மகா சுசீந்திரன் தலைமையில் பாஜகவினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக வந்துள்ளனர்.அப்போது பாஜகவினர் சிலைக்கு மாலை அணிவிக்க முற்பட்டபோது விசிக தொண்டர்கள் தடுத்தனர்.
அப்பொழுது ஒரு தொண்டர், “எங்க அம்பேத்கர் ஐயாவுக்கு நீங்க எதற்கு மாலை போடுறீங்க... உங்களுக்கு இங்கே என்ன வேலை... போ... போ... போய்ட்டே இரு” என்று கூறியுள்ளார். இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. விசிகவினர் பாஜகவினரை ஓட ஓட அடித்து விரட்டியடித்துள்ளனர். இரு தரப்பினர் மோதிக் கொண்டதில் பாஜகவைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் மதுரையில் பதற்றமான சூழல் நிலவியது. இந்த சம்பவத்திற்கு சமூகவலைத்தளங்களில் கண்டனங்களும் எழுந்தன.
இதனையடுத்து, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட விசிகவினர் 50 பேர் மீதும், பாஜகவினர் 10 பேர் மீதும் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் விசிக - பாஜக இடையே தள்ளுமுள்ளு pic.twitter.com/ft5ddqerxZ
— QLN NEWS (@QlnNews) April 14, 2021