கத்தாரில் தொடரும் மர்மம்! 6,500 புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம்..? வெளியான அதிர்ச்சி தகவல்
உலக கோப்பை கால் பந்து போட்டி நடைபெற்று வரும் கத்தாரில் 6,500 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உலக கோப்பை கால்பந்து தொடர் -
பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி வருகிறது. கால்பந்து உலக கோப்பை தொடர் உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழாவாகும்.
உலக கோப்பை கால்பந்து கடைசிப் போட்டி ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெற்றது. இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்நிலையில், 4 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தொடங்கி உள்ளது.
இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. 32 அணிகளின் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் விளையாடி வருகின்றன.]
கத்தாரில் 6,500 புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம்..?
இந்நிலையில், கத்தாரில் தெற்காசியாவை சேர்ந்த 6,500 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வரும் கத்தாரில் பல கட்டுப்பாடுகள் மற்றும் கத்தாரின் மனித உரிமைகள் மீறல் தொடர்பாக பல புகார்கள் எழுந்த வண்ணம்உள்ளன.
வெளிநாட்டு கால்பந்து ரசிகர், ரசிகைகள் உலகக்கோப்பை போட்டிகளை கண்டுகளிக்க கத்தாருக்கு வருவதில் விரும்பவில்லை. வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் ரசிகர், ரசிகைகளின் வருகை பெருமளவு குறைந்துள்ளதால், பணம் கொடுத்து 'போலி ரசிகர்களை' கத்தார் களமிறக்குவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகின்றன.
இப்போட்டி தொடருக்கு முன், போட்டி நடந்து வரும் தற்போதும் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களின் மரணங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போட்டி தொடரின்போதே பிலிப்பினோ என்ற ஒரு தொழிலாளர் மரணம் பற்றிய கேள்விக்கு கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டி தொடரின் தலைமை செயல் அதிகாரி நாசர் அல்-காட்டர் கூறுகையில்,
இது ஊடகங்களால் பரப்பப்படும் பொய்யான தகவல் பரப்பப்படுகின்றது என்றும், மரணம் வாழ்வின் இயற்கையான ஒரு பகுதி என்றும் தெரிவித்தார். இவரின் இந்த பேச்சு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
தி கார்டியன் பத்திரிகையின் வெளியான செய்தி ஒன்றில், 10 ஆண்டுகளாக புலம்பெயர் தொழிலாளர்களின் கொடூர பணி சூழல் மற்றும் அவர்களின் மரணம் பற்றிய அறிக்கையில், தெற்காசியாவை சேர்ந்த 6,500 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், புலம்பெயர் தொழிலாளர்கள் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்காளதேசம் மற்றும் இலங்கை நாடுகளில் இருந்து சென்றவர்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டது.