பள்ளி மாணவனை காதலித்து திருமணம் செய்த பெண் ஆசிரியை ; போக்சோ சட்டத்தில் அதிரடியாக கைது

ariyalur pocso act female teacher arrested for marrying student 10th grade
By Swetha Subash Dec 28, 2021 01:16 PM GMT
Swetha Subash

Swetha Subash

in குற்றம்
Report

அரியலூர் அருகே 10-ம் வகுப்பு மாணவனை காதலித்து திருமணம் செய்த பெண் ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம், மழவராய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணி என்பவரது 17 வயது மகன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

அதே மாவட்டம் அம்பாபூர் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரது மகள் ராசாத்தி (24) தனியார் பள்ளியில் பயிற்சி ஆசிரியையாக வேலைபார்த்து வருகிறார்.

இந்நிலையில் இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். ஆசிரியை, மாணவனுக்கு ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு எடுத்தனர்.

மாணவனுக்கு வயது குறைவு என்பதால் இருவரது வீட்டிலும் காதலை ஏற்றுக் கொள்ளாத நிலையில் கடந்த அக்டோபர் மாதம் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள மூங்கில்பாடி என்கிற கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு இருவரும் சென்றுள்ளனர்.

அங்கு வீட்டில் யாரும் இல்லாததால் இருவரும் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தியதாக அவரது உறவினர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

இவர்களின் காதலை யாரும் ஏற்றுக் கொள்ளாத நிலையில் இருவரும் மனமுடைந்து விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி விஷ மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

பின்னர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மாணவன், ராசாத்தி இருவரையும் டூவீலரில் குன்னம் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் கொண்டு சேர்த்துள்ளனர்.

அங்கு முதல் உதவி சிகிச்சை பெற்ற பின்னர் ராசாத்தி உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்ததால் உயர் சிகிச்சைக்காகப் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில் மாணவனின் குடும்பத்தினர் குன்னம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர் அதன் பெயரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இரண்டுமாதமாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தநிலையில். தற்போது ராசாத்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்துள்ளனர்.

போக்சோ சட்டத்தில் பெண் ஆசிரியர் கைது செய்யப்படிருக்கும் விவகாரம் தான் தற்பொழுது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.