பெண் எஸ்.பிக்கு மிரட்டல் விடுக்கும் அளவுக்கு துணிச்சல் எப்படி வந்தது?: ஸ்டாலின் கேள்வி
முதல்வர் பாதுகாப்பு பணி முடித்துவிட்டு சென்னை திரும்பிய பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இது பற்றி விசாரணை நடத்த 6 பேர் கொண்ட குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனாலும் இந்த வழக்கு பெரும் சர்ச்சையானதால் , வழக்கு சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டது.
இதனிடையே, வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பெண் காவல்துறை அதிகாரிகளுக்கே இந்த நிலைமையா என கேள்வி எழுப்பியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான் சிறப்பு டிஜிபி, எஸ்.பி இருவரும் இன்னமும் காத்திருப்பு பட்டியலில் தான் உள்ளனர் கைது செய்யப்படவில்லை.
இந்த நிலையில், பெண் எஸ்பியின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ள சிறப்பு டிஜிபி, எஸ்.பி ஐ கைது செய்ய வேண்டுமென திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெண் எஸ்.பிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு ஒரு குற்றவாளிக்கு துணிச்சல் எப்படி வந்தது? இரண்டு அதிகாரிகளையும் சஸ்பெண்ட் செய்த பிறகும் இன்னும் கைது செய்யாமல் விட்டு வைத்திருப்பது எதற்காக? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.