பெண் பேராசிரியர் உயிரிழப்பு ; தற்கொலையா என போலீசார் விசாரணை
திருச்சியில் அடுக்குமாடி குடியிருப்பில் கிழே பெண் பேராசிரியர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காதல் திருமணம்
திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரேம்குமார். இவருடைய மனைவி சவுமியா (வயது 32).
இவர் திருச்சி தில்லைநகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் வணிகவியல் துறை பேராசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த தம்பதி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு ரியா (11), சிவியா (6) என்ற 2 மகள்கள் உள்ளனர். பிரேம்குமார் பல்வேறு வியாபாரங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.
இவர்களுடன் சவுமியா அடுக்குமாடி குடியிருப்பின் 13-வது மாடியில் பி.பிளாக்கில் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சவுமியா மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து கிடந்தார். இதை கண்ட அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசார் விசாரணை
உடனடியாக எடமலைப்பட்டிபுதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை தொடர்ந்து இது குறித்து, போலீசார் விசாரணை நடத்தினார்கள். முதல்கட்ட விசாரணையில், சவுமியா நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மேல் வீட்டில் இருந்து துணி காய போடுவதற்காக வெளியே வந்துள்ளார்.
அதன்பிறகே அவர் மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்துள்ளதாக தெரிகிறது. இதனால் அவர் துணிகளை காய வைத்தபோது நிலைத்தடுமாறி கீழே தவறி விழுந்து இறந்தாரா? அல்லது குடும்பத்தகராறு காரணமாக மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கீழே தள்ளி கொலை செய்தார்களா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.