ரூ.2.27 கோடி ரூபாய் லஞ்சப்பணத்துடன் சிக்கிய பெண் அதிகாரி - வேலூரில் அதிர்ச்சி
வேலூரில் ரூ.2.27 கோடி ரூபாய் லஞ்சப்பணத்துடன் சிக்கிய பெண் அதிகாரி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலுார் கோட்ட பொதுப்பணித்துறை தொழில்நுட்ப கல்வி பிரிவு செயற்பொறியாளராக ஷோபனா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் கலை, பொறியியல், பாலிடெக்னிக் கல்லுாரிகளின் கட்டுமான பணிகளுக்கு அனுமதி வழங்குவது, அதற்கான பில் தொகையை ஒப்பந்ததாரர்களுக்கு ஒதுக்குவது உள்ளிட்ட பணிகளை செய்து வந்தார்
இதனிடையே செயற்பொறியாளர் ஷோபனா அதிக அளவில் லஞ்சம் வாங்குவதாக ஏராளமான புகார்கள் லஞ்ச ஒழிப்புத்துறைக்குச் சென்றது. இதைத் தொடர்ந்து வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. (பொறுப்பு) கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அவரை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
இதனையடுத்து கடந்த நவம்பர் 3 ஆம் தேதி வேலூர் ஜெயில் அருகே அணைக்கட்டு சாலையில் உள்ள ஒரு ஓட்டல் அருகே அவரது காரை மறித்து அதிரடியாக சோதனையிட்டனர். காரில் ரூ.5 லட்சம் ரொக்கப் பணம் இருந்த நிலையில் அதற்கான ஆவணம் இல்லாததால் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர் தங்கி இருந்த அறையில் போலீசார் சோதனை நடத்தியபோது அறையில் மேலும் ரூ.20 லட்சம் கைப்பற்றப்பட்டது. அங்கிருந்த ரூ.3.92 லட்சத்திற்கான காசோலைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஷோபனாவின் வீட்டுக்கு அவரை அழைத்துச் சென்ற லஞ்சஒழிப்பு போலீசார் அங்கு சோதனை நடத்தியபோது அதிர்ந்துப்போயினர். ரூ.2000, 500 நோட்டுகள் கட்டுக்கட்டாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மொத்தத்தையும் எண்ணி அடுக்கியபோது அது ரூ.2.27 கோடி என தெரியவந்தது.
அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் வேலுார் மாவட்ட நன்னடத்தை அலுவலர் முருகன் புகார்படி ஷோபனா மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 27 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்த போலீசார் இன்று ஷோபனாவை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.