பிரசவத்தில் பெண் உயிரிழப்பு - மனஅழுத்தத்தால் மருத்துவர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
ராஜஸ்தான் மாநிலம், தௌசா லால்சொட் பகுதியை சேர்ந்தவர் அர்ச்சனா ஷர்மா. இவர் மருத்துவராக பணி புரிந்து வருகிறார். இவரும், இவருடைய கணவரும் சேர்ந்து தன்னுடைய வீட்டின் கீழ்ப்பகுதியில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், அர்ச்சனா ஷர்மாவின் மருத்துவமனைக்கு கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவம் பார்க்க வந்துள்ளார். ஆனால், பிரசவத்தில் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
மருத்துவர் அலட்சியமாக பிரசவம் பார்த்ததாகவும், தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்து விட்டதாக இறந்த பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் அர்ச்சனா மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து மருத்துவர் அர்ச்சனா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனால், மருத்துவர் அர்ச்சனா மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். இதனையடுத்து, தனது வீட்டில் உள்ள அறை சென்றவர் நெடுநேரமாகியும் வெளியே வரவில்லை.
சந்தேகமடைந்த கணவர் கதவை தட்டியும் திறக்காததால், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, அர்ச்சனா தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவர், இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அர்ச்சனா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
