கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ பெண் எடுத்த அதிரடி முடிவு - போலீசில் சிக்கிய கணவன்
கேரளாவில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ இளம்பெண் செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் வண்டன் மேடு பகுதியை சேர்ந்த சுனில் வர்கீஸ் என்பவரது மனைவி சவுமியா வண்டன்மேடு பஞ்சாயத்து கவுன்சிலராக உள்ளார். இதனிடையே அதே பகுதியைச் சேர்ந்த வெளிநாட்டில் வேலை செய்து வரும் வினோத் என்பவருடன் சவும்யாவுக்கு நெருக்கம் ஏற்பட்டது.
இதனால் வினோத் துபாயிலிருந்து அடிக்கடி ஊருக்கு வந்து சவுமியாவை சந்தித்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்த நிலையில் இதற்கு சுனில் வர்கீஸ் தடையாக இருப்பார் என எண்ணி அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
ஆனால் போலீசில் சிக்கிவிடுவோம் என பயந்த இருவரும் அந்த திட்டத்தை கைவிட்டு சுனிலை போதைப் பொருள் வழக்கில் சிக்கவைக்கலாம் என முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து வினோத் தன்னுடைய நண்பரான ஷாநவாஸ் என்பவரை தொடர்புக் கொண்டு விவரத்தை கூறி, அவர் கொச்சியில் உள்ள ஒரு போதைப் பொருள் கும்பலிடம் ரூ. 45,000 க்கு எம்.டி.எம். ஏ என்ற போதைப்பொருள் வாங்கி கொடுத்துள்ளார்.
சவுமியா அந்த போதைப் பொருளை தனது கணவனின் பைக்கில் மறைத்து வைத்து விட்டு வினோத்துக்கு தகவல் கொடுக்க கடந்த சில தினங்களுக்கு முன் வினோத் தன்னுடைய நண்பர் மூலம் சுனில் பைக்கில் போதைப் பொருள் கடத்துவதாக இடுக்கி மாவட்ட எஸ்.பி.க்கு ரகசிய தகவல் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடத்தும்படி எஸ்.பி கருப்பசாமி வண்டன் மேடு போலீசுக்கு உடனடியாக உத்தரவிட்டார். போலீசார் சுனிலின் பைக்கை சோதனையிட்ட போது போதைப் பொருள் சிக்கியது. அவரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் சுனில் நிரபராதி என தெரியவந்தது.
பின்னர் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் சவுமியா மற்றும் அவரது கள்ளக்காதலன் வினோத் ஆகியோர் சேர்ந்து நடத்திய திட்டம் என தெரிய வந்தது. மேலும் இத்திட்டத்திற்கு உதவியாக இருந்த ஷெபின் ஷா, ஷாநாவாஸ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கணவனை போதைப் பொருள் கடத்தல் வழக்கில் பெண் கவுன்சிலர் சிக்க வைத்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.