“உங்களால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது” - நடிகர் அஜித்திற்கு ஆர்.கே.செல்வமணி கோரிக்கை
தமிழகத்தில் படப்பிடிப்பு நடைபெறாததால் பெப்சி தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவதாக நடிகர் அஜித்திற்கு பெப்சி (FEFSI) தலைவர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை வைத்துள்ளார்.
சமீப காலமாக, பல பெரிய தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்பு ஹைதராபாத் போன்ற வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் படப்பிடிப்பு நடைபெறாததால் பெப்சி தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி அஜித்திற்கு நேரடியாக கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் “AK 61” படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆர்.கே.செல்வமணி, “இங்கே வருமானம் பார்த்து வேறு மாநிலத்தில் செலவு செய்வதில் எந்த லாபமும் இல்லை. படத்திற்கு தேவைப்படும் பட்சத்தில் வெளிமாநிலங்களுக்குச் செல்வதில் தவறில்லை.
ஆனால், சென்னை மவுண்ட்ரோடு, ஹைகோர்ட்டை ஐதராபாத்தில் செட் போட்டு ஷூட் செய்கிறார்கள். இங்கிருக்கும் ஆயிரக்கணக்கானத் தொழிலாளர்கள் வயிற்றில் மண்ணை அள்ளிப்போட்டுவிட்டு அங்கு போய் ஷுட் செய்வதில் என்ன ஈகோ சேட்டிஸ்ஃபை ஆகிறது என்று தெரியவில்லை.
இது தொடர்பாக நடிகர் விஜயிடம் ஒரு வேண்டுகோள் வைத்தோம். உடனடியாக இதன் மீது அவர் நடவடிக்கை எடுத்திருக்கிறார். இதுவரை தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் தான் வேண்டுகோள் வைத்திருந்தோம். இப்போது நடிகர் அஜித்துக்கு நேரடியாகவே வேண்டுகோள் வைக்கிறோம்.
நீங்கள் ஹைதராபாத்தில் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்துவதால் தமிழ்நாட்டில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இவர்களை நஷ்டப்படுத்துவதால் உங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படும். வருங்காலத்திலும், நிகழ்காலத்திலும் இதை தவிர்க்கவேண்டும் என்று நேரடியான வேண்டுகோளாகவே வைக்கிறேன்” என தெரிவித்தார்.