கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் புதிய தளர்வுகளை அறிவித்த மத்திய அரசு.!
இந்தியாவில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சீரம் நிறுவனத்தின் கோவீஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முதலில் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மார்ச் 1 முதல் 65 வயதுக்கு அதிகமானவர்களுக்கும், 45 வயதுக்கும் மேற்பட்ட மருத்துவ சிக்கல்கள் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தடுப்பூசியை அனைவருக்கும் செலுத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கும் மேற்பட்ட அனைவருமே கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.