பிப்ரவரி வரைக்கும் மாஸ்க் போடுங்க மக்களே : ராதாகிருஷ்ணன் பேட்டி
குறைந்தபட்சம் பிப்ரவரி வரையாவது மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் சார்பில் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர் பெண்களுக்கு புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாமை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா 100 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளது. இதற்கு ஒவ்வொரு மாநிலமும் தனது பங்கை செலுத்தி உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 5.4 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தற்போது நம்மிடம் 53.84 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. தமிழ்நாட்டில் தளர்வுகள் அளிக்கப்பட்ட போதிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும்.
இதை கடமையுடன் கூடிய தளர்வுகள் என மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் பிப்ரவரி வரையாவது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என தெரிவித்தார்.
ஒன்றிய அரசு அனுமதி அளித்தவுடன் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தாலும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
100 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை 130 கோடி என்ற நிலையில் 100 கோடி தடுப்பூசி என்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்கள் தடுப்பூசி செலுத்தியதில் முதல் 5 இடங்களில் உள்ளன.
மக்கள் தொகை அடிப்படையில் அதிகளவு தடுப்பூசி செலுத்தி உத்தரகண்ட் சாதனை சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிட்த்தக்கது.