இந்தியா கொரோனாவிலிருந்து தப்பிக்க இது ஒன்று தான் வழி - அந்தோணி ஃபௌசி மந்திரம்!
இந்தியாவில் கொரோனாவின் கோரத்தாண்டவம் கட்டுப்பாடு இல்லாமல் செல்கிறது. இதே வேகத்தில் சென்றால் இன்னும் ஒரு மாதத்தில் இந்தியா அமெரிக்காவை மிஞ்சி கொரோனா கடுமையாக பாதித்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துவிடும்.
கொரோனாவால் தினசரி பாதிப்புகளும் மரணங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அபரிவிதமாக அதிகரித்ததால் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. ஆக்சிஜன், படுக்கைகள், சிகிச்சைக்கான மருந்துகள் கிடைக்காமல் மக்கள் அலைமோதினர்.
கொரோனாவின் இரண்டாம் அலை தொடர்பாக பலமுறை தொடர்ந்து எச்சரிக்கப்பட்டும் மத்திய அரசு அதற்கு முன்னெச்சரிக்கையாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் தான் இந்தியா தற்போது இத்தகைய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
இந்த நிலையில் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் வேகமும் குறைந்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு. தடுப்பூசிக்கான தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்ற அளவு உற்பத்தி அதிகரிக்கப்படவில்லை. இதனால் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடும் மாநிலங்களுக்கிடையே கடுமையான போட்டியும் நிலவி வருகிறது.
இவ்வாறு பல்வேறு நெருக்கடிகளை இந்தியா கொண்டு வரும் நிலையில் அமெரிக்க அரசின் தலைமை மருத்துவர் அந்தோணி ஃபௌசி பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்.
அவற்றில் முதன்மையாக இந்தியாவில் கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து தப்பிக்க தடுப்பூசி ஒன்றே வழி. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிக்கும் கட்டமைப்பு கொண்ட நாடு. எனவே இந்தியாவுக்கு உள்நாட்டிலிருந்து மட்டுமல்லாது உலக நாடுகளிலிருந்தும் உதவிகள் குவிய வேண்டும்.
இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதோடு மற்ற நாடுகளிலிருந்தும் தடுப்பூசி இறக்குமதி செய்ய வேண்டும். அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தி முடிப்பதே இதற்கு ஒரே வழி. அதற்கு தேவையானவைகளை விரைந்து செய்ய வேண்டும்.
மறுபுறம் அதிகரித்து வரும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தற்காலிக மருத்துவமனைகளை இராணுவத்தின் உதவியுடன் உருவாக்க வேண்டும். சீனா கடந்த ஆண்டு அதைத்தான் செய்தது. ஆக்சிஜன், படுக்கைகள் இல்லாமல் மக்கள் வீதிகளில் காத்திருப்பது அவலமானது. அடிப்படை சிகிச்சைக்கான தேவையான விஷயங்கள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.” என்றார்
அந்தோணி ஃபௌசி ஏற்கனவே இந்தியா நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் எனப் பரிந்துரைத்திருந்தார். தடுப்பூசி செலுத்தப்படுவது நீண்ட கால இலக்காக உள்ள நிலையில் பரவலை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர தற்காலிக ஊரடங்கு அவசியமானது என்றுள்ளார்.