தாயுடன் தகராறு செய்வதை கண்டித்த 2 மகள்களை கொன்ற தந்தை - பொதுமக்கள் அதிர்ச்சி

Attempted Murder
By Petchi Avudaiappan May 21, 2022 04:44 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

காஞ்சிபுரம் அருகே தாயுடன் தகராறு செய்வதை கண்டித்ததால் 2 மகள்களை தந்தை அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தை அடுத்த குண்ணவாக்கம் அருகேயுள்ள சின்ன மதுரபாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் (42) என்பவர் பெயிண்டராக உள்ளார். இவருக்கு கீதா(35) என்ற மனைவியும், நந்தினி (16), நதியா (15), தீபா(8) என 3 மகள்களும், தீனா (10) என்ற மகனும் உள்ளனர். 

இதில் மகள் நதியா சில மாதங்களுக்கு முன் தீக்குளித்து இறந்ததாக கூறப்படுகிறது. வாலாஜாபாத் ஊத்துக்காடு பகுதியில் குடோன் ஒன்றில் கீதா தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இதனிடையே நேற்று முன்தினம் கோவிந்தராஜ் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர் நேற்று காலை வழக்கம் போல் கீதா வேலைக்கு சென்று விட மீண்டும் குடித்து விட்டு கோவிந்தராஜ் வீட்டுக்கு வந்துள்ளார். 

அப்போது வீட்டில் இருந்த நந்தினி எப்போதும் குடித்து விட்டு வந்து தகராறு செய்கிறாயே, ஏன்  வேலைக்கு போகாமல் குடித்துவிட்டு அம்மாவுடன் தகராறு செய்கிறாய் என கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தராஜ் கட்டையால் நந்தினியை தலையில் அடித்ததுடன் அவரது கழுத்தை இறுக்கியுள்ளார். அப்போது சத்தம் கேட்டு வீட்டுள்ளே வந்த இளைய மகள் தீபாவையும் அவர் கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த நந்தினியும், தீபாவும் வலி தாங்க முடியாமல் துடிதுடித்து ரத்தவெள்ளத்தில் சரிந்தனர்.

இவர்களில் சிறிது நேரத்தில் தீபா பரிதாபமாக உயிரிழந்தார். அந்த நேரம் வெளியில் விளையாட சென்ற மகன் தீனா வீட்டுக்கு வந்து பார்த்த போது ரத்தவெள்ளத்தில் சகோதரிகள் கிடப்பதை பார்த்து கூச்சலிட்டு கதறினான் . உடனடியாக ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் நந்தினியை மீட்டு ஒரகடம் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் மகள்களை கொலை செய்து விட்டு தப்பியோடிய கோவிந்தராஜ் ஒரகடம் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.