25 வயதாகியும் 2 வயது குழந்தை போல இருக்கும் பெண் - தாயாக மாறிய தந்தை
திண்டுக்கலில் 25 வயதாகியும் குழந்தையாக இருக்கும் மகளை தாய் ஸ்தானத்தில் இருந்து தந்தை கவனித்து வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் புளியராஜக்காபட்டி பெரியார் நகரை சேர்ந்த காளியப்பன் - மகாலட்சுமி தம்பதிக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களில் சுதா என்ற மகள் 25 வயதாகியும் இரண்டு வயது குழந்தைபோன்ற தோற்றத்தில் உள்ளார்.
பேசும், கேட்கும் திறனற்ற சுதாவின் 9வது வயதில் தாய் மகாலட்சுமி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அதன்பிறகு தந்தை காளியப்பனும், இரண்டு சகோதரிகளும் சுதாவை பார்த்துக் கொண்டனர்.
அதன்பின் சகோதரிகள் இருவருக்கும் திருமணமானதால் காளியப்பன் தான் தாய் ஸ்தானத்தில் இருந்து சுதாவை கவனித்து வருகிறார். மகன் கார்த்தி பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு கூலி வேலை செய்கிறார்.
அவரது வருமானம் மற்றும் மாற்றுத்திறனாளிக்கான மாதத்தொகை ஆயிரம் ரூபாயை வைத்து குடும்பத்தை நடத்தவே காளியப்பன் சிரமப்பட்டு வருகிறார். எனவே, தமிழக அரசு தனது மகளுக்கு உதவி செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.