4 நாளில் திருமணம்; வீடியோ வெளியிட்ட மகள் - சரமாரியாக சுட்டு கொன்ற தந்தை
தந்தை, மகளை சுட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்திற்கு மறுப்பு
மத்திய பிரதேசம், குவாலியரைச் சேர்ந்தவர் தனு குர்ஜார்20. இவர், உத்தர பிரதேசத்தின் ஆக்ராவைச் சேர்ந்த விக்கி என்பவரை கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தனுவின் குடும்பத்தினர், அவருக்கு வேறொரு நபருடன் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். இதற்கான அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்ட நிலையில், திருமணத்துக்கு தனு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
தந்தை வெறிச்செயல்
இது தொடர்பான வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். அதில், 'நான் விக்கியை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். என் குடும்பத்தினர் ஆரம்பத்தில் ஒப்புக்கொண்டனர். ஆனால், பின்னர் மறுத்து விட்டனர். அவர்கள் என்னை தினமும் அடித்துக் கொலை செய்வதாக மிரட்டுகிறார்கள்.
எனக்கு ஏதாவது நடந்தால், என் தந்தை மகேஷ் மற்றும் குடும்பத்தினர்தான் பொறுப்பு என தெரிவித்திருந்தார். இதையடுத்து, காவல்துறையில் தனு புகார் அளித்தார். மகளை சமாதானப்படுத்த அவரது தந்தை மகேஷ் காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்டார்.
ஆனால், காவல்துறையினர் கண் முன்னே மகேஷ் திடீரென தனது துப்பாக்கியை எடுத்து, மகளை சுட்டுக் கொன்றார். உடனே மகேஷை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.