4 நாளில் திருமணம் - போலீசார் கண்முன்னே மகளை சுட்டு கொன்ற தந்தை
போலீசார் கண்முன்னே மகளை சுட்டு கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
காதலுக்கு எதிர்ப்பு
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள கோலா கா மந்திர் பகுதியில் வசித்து வருபவர் மகேஷ் குர்ஜார். இவரது மகள் தனு குர்ஜார்(20) 6 ஆண்டுகளை உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த பிக்கம் விக்கி மாவாய் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
ஆனால் இந்த காதலுக்கு தனுவின் தந்தை மகேஷ் உட்பட அவரது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். மேலும், தனுவின் விருப்பமின்றி அவருக்கு வேறு ஒருவருடன் ஜனவரி 18 ஆம் தேதிக்கு திருமண ஏற்பாடு செய்து பத்திரிக்கையும் அச்சடித்துள்ளனர்.
இளம்பெண் வீடியோ
திருமணத்திற்கு 4 நாட்களே உள்ள நிலையில் தனு வீடியோ ஒன்றை பதிவு செய்து அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில், "நான் 6 வருடங்களாக காதலித்து வரும் விக்கியை திருமணம் செய்ய விரும்புகிறேன். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எனது குடும்பத்தினர் என்னை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிக்கின்றனர்.
மேலும் என்னை என்னை தினமும் அடித்து, கொலை செய்துவிடுவதாக மிரட்டுகின்றனர். எனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் அதற்கு என் குடும்பத்தினரே காரணம்" என கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலானதையடுத்து, காவல் கண்காணிப்பாளர் தரம்வீர் சிங் தலைமையிலான காவல்துறையினர் தனுவின் வீட்டிற்கு விரைந்தனர்.
மகளை சுட்ட தந்தை
அதிகளவிலான காவல்துறையினர் வந்ததால் அந்த ஊர் பஞ்சாயத்து பிரமுகர்களும் வந்தனர். அனைவரும் பேச்சு வார்த்தை நடத்தி கொண்டிருந்த நிலையில், தனது மக்களிடம் தனிப்பட்ட முறையில் பேசி சம்மதிக்க வைக்கப்போவதாக கூறி தனுவை தனியாக அழைத்து சென்று பேசினார். அப்போது திடீரென அங்கு மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை வைத்து தனுவின் மார்பில் சுட்டார்.
அருகில் இருந்த அவரது உறவினர் ராகுலும், துப்பாக்கியில் தனுவின் நெற்றி மற்றும் கழுத்தில் சுட்டார். இதில் சம்பவ இடத்திலே தனு உயிரிழந்தார். இதை எதிர்பாராத காவல்துறையினரும் பஞ்சாயத்தினரும் அதிர்ச்சியில் உறைந்தனர். பிடிக்க வந்தால் சுட்டு விடுவோம் என அவர்களை நோக்கி இருவரும் துப்பாக்கியை நீட்டினார்.
அப்போது ராகுல் சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்று விட்டார். மகேஷை கைது செய்த காவல் துறையினர் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினர் கண் முன்னே நடந்த இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.