‘பாசத்தை ஓவர்-டேக் செய்த பணம்’ - பெற்ற மகனை இரக்கமின்றி எரித்து கொன்ற கொடூர தந்தை - வெளிவந்த அதிர்ச்சி காரணம்
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 53 வயதான சுரேந்திரா என்பவருக்கு 23 வயதில் அர்பித் என்ற மகன் இருக்கிறார். பெங்களூரு அஷோக் நகர் பகுதியில் வசித்து வரும் சுரேந்திரா ஆர்கிடெக்ட் என்றழைக்கப்படும் கட்டிடங்களை வடிவமைக்கும் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் தனது தொழிலை மகன் அர்பித்திடம் ஒப்படைக்க முடிவு செய்து இது பற்றி மகனிடன் கூறியுள்ளார் சுரேந்திரா. இதற்கு மறுப்பு தெரிவித்த அர்பித் தான் சி.ஏ படிக்கவுள்ளதாகவும் அதனால் தொழிலை கவனித்துக்கொள்ளமுடியாது எனவும் தெளிவாக கூறியுள்ளார்.
எனினும் அர்பித்தை கட்டாயப்படுத்தி தொழிலை கவனிக்க செய்துள்ளார் சுரேந்திரா. இந்நிலையில் அர்பித் தொழிலை முன்நின்று கவனித்து கொள்ள, பின்னால் இருந்து அவரை சுரேந்திரா இயக்கி வந்துள்ளார்.
ஆனாலும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும் தொழில் மூலம் கிடைத்த ரூ.1½ கோடி பணத்தை சுரேந்திராவிடம், அர்பித் கொடுக்காமல் இருந்து வந்ததாலும் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பாகவும் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை வந்துள்ளது.
இந்த நிலையில் ஆசாத் நகரில் உள்ள தங்களுக்கு சொந்தமான குடோனுக்கு கடந்த 1-ந் தேதி சுரேந்திராவும், அர்பித்தும் சென்று உள்ளனர். அங்கு வைத்து பணத்தை தரும்படி சுரேந்திரா, அர்பித்திடம் கேட்க இருவருக்கும் குடோனில் மீண்டும் தகராறு ஏற்பட்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் பணத்தை தர முடியாது. என்னை வேண்டும் என்றால் கொலை செய்து கொள் என்று அர்பித் சுரேந்திராவிடம் சவால் விடும் வகையில் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சுரேந்திரா குடோனில் இருந்த பெயிண்ட் தயாரிக்க பயன்படுத்தப்படும் தின்னரை எடுத்து அர்பித் மீது ஊற்றி தீயை கொழுத்தி போட்டுள்ளார்.
இதில் அவரது உடல் முழுவதும் தீப்பிடித்து எரியவே வலி தாங்க முடியாமல் அர்பித் அலறியள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அர்பித் உடலில் பிடித்த தீயை அணைத்து பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அர்பித் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். சம்பவம் குறித்து அறிந்த சாம்ராஜ்பேட்டை போலீசார் மருத்துவமனைக்கு சென்று அர்பித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் தொழிலில் நஷ்டம் ஏற்படுத்தியதாலும், ரூ.1½ கோடி தராததாலும் ஆத்திரத்தில் அர்பித்தை, சுரேந்திராவை தீ வைத்து எரித்து கொலை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து சாம்ராஜ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேந்திராவை கைது செய்து அவரிடம் விசாரணை நடந்து வருகின்றனர்.
பெற்ற மகனை, தந்தையே எரித்து கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.