பாலியல் பலாத்கார குற்றவாளியால் கொல்லப்பட்ட தந்தை: உடலை சுமந்து சென்ற பாதிக்கப்பட்ட மகள்- நெஞ்சை உருக்கும் புகைப்படம்

killed photo father
By Jon Mar 04, 2021 12:41 PM GMT
Report

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் துஷ்பிரயோகம் செய்தவனால் கொல்லப்பட்ட தந்தையின் உடலை பாதிக்கப்பட்ட மகள் தோளில் சுமந்துச்சென்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி காண்பேரை கலங்கவைத்துள்ளது. உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் நகரிலே இத்துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த ஆண்டு இதே நகரில் 20 வயது பெண் நான்கு நபர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது நினைவுக் கூரத்தக்கது. இந்நிலையில், தற்போது மீண்டும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவம் மூலம் ஹத்ராஸ் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை குற்றவாளியால் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2018 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, குற்றவாளி கௌரவ் சர்மா மீது பொலிசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, 2018-ல் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் கைது செய்யப்பட்ட கௌரவ் சர்மா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த கௌரவ் சர்மா பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையை சுட்டுக்கொன்றுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தனது தந்தையின் கொலைக்கு நீதி கேட்ட கதறிய வீடியோ இணையத்தில் வைரலானது.

சம்பவம் தொடர்பில் கௌரவ் சர்மா குடும்பத்தை சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளதாக உத்தர பிரதேச பொலிசார் தெரிவித்துள்ளனர், மற்ற குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.  

இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண் கொல்லப்பட்ட தந்தையின் உடலை தோளில் சுமந்துச்சென்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி கலங்க வைத்துள்ளது.