பெற்ற மகனையே விஷ ஊசி போட்டு கொன்ற தந்தை - சேலத்தில் பயங்கரம்

By Petchi Avudaiappan Oct 05, 2021 08:24 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

 புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை விஷ ஊசி போட்டு கொன்ற கொடூர சம்பவம் சேலத்தில் நடைபெற்றுள்ளது.

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் கட்சுப்பள்ளி கிராமம் கொடைகாரன் வளவு பகுதியை சேர்ந்த லாரி டிரைவரான பெரியசாமி,சசிகலா தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் இளைய மகன் வண்ணத்தமிழுக்கு ஒரு வருடத்திற்கு முன் சைக்கிள் ஓட்டிச் செல்லும்போது ஏற்பட்ட ஒரு சிறிய விபத்தில் கால் எலும்பில் அடிபட்டுள்ளது.

இதற்கு உள்ளூர் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்துள்ளனர். தொடர்ந்து சிகிச்சை பயனளிக்காத நிலையில் சேலம் தனியார் மருத்துவமனைக்கு சிறுவனை கொண்டு சென்று ஸ்கேன் பரிசோதனை செய்துள்ளனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர் புற்றுநோய் எலும்பில் ஏற்பட்டுள்ளதாக வண்ணத்தமிழின் பெற்றோரிடம் கூறியுள்ளார்..

இதனைத் தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனையில் ஒரு வருடத்திற்கு மேலாக சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இதனிடையே சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் சிறுவன் வண்ண தமிழ் பெரும் சிரமப்பட்டு வந்துள்ளார். படுத்த படுக்கையான தன் மகனை இந்த நிலைமையில் பார்க்க முடியாமல் பெற்றோர் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்..

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பெரியசாமி, கொங்கணாபுரம் லேப் அட்டெண்டர் பிரபு, மருந்துக்கடை உரிமையாளர் வெங்கடேசன் ஆகியோரை அழைத்து அவரது மகன் வண்ணத் தமிழுக்கு விஷ ஊசி போட்டு கொலை செய்ததாக போலீசுக்கு புகார் சென்றது. அந்த புகாரின் பேரில் கொங்கணாபுரம் காவல் துறையினர் பெரியசாமி, லேப் அட்டெண்டர் பிரபு, மருந்துக்கடை உரிமையாளர் வெங்கடேசன் ஆகிய மூவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் போவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.