ஒரே கூட்டணியில் தேர்தல் களத்தில் இறங்கும் மாமனார்- மருமகன்
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரே கூட்டணியில் மாமனார்- மருமகனும், தந்தை - மகனும், அண்ணன் - தம்பியும் போட்டியிடுவதால் யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. புதுச்சேரி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருக்கிறது.
இதில் என்.ஆர்.காங்கிரஸ் தவிர்த்து இதர கட்சிகள் நேற்று இரவு வேட்பாளர்களை அறிவித்திருக்கின்றன. புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி 1991ம் ஆண்டு தட்டாஞ்சாவடி தொகுதியில் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து ஏழு முறை போட்டியிட்டு வென்றி பெற்றுள்ளார். தற்போது 8-வது முறையாக போட்டியிட இருக்கிறார்.
ரங்கசாமிக்குத் திருமணம் ஆகவில்லை. அவரது அண்ணன் மகளைத் திருமணம் செய்து கொண்டவர் நமச்சிவாயம்.
அவர் காங்கிரஸிலிருந்து தற்போது பாஜகவுக்குச் சென்றுவிட்டார். தற்போது 4-வது முறையாக மண்ணாடிப்பட்டில் போட்டியிட உள்ளார். மாமனார்- மருமகனும் ஒரே கூட்டணியில் களம் காண்பதால் யாருக்கு வெற்றி என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.