“காதல் கேக்குதா?” - திருமணமான மகளை கொல்ல முயன்ற கொடூர தந்தை
திருப்பூரில் காதல் திருமணம் செய்த மகளை தந்தையே கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி மடத்துப்பாளையம் சாலை முனியப்பன் கோயில் பகுதியில் தூத்துக்குடியைச் சேர்ந்த பூராஜா என்பவர் பெயிண்டர் தொழில் செய்து வருகிறார்.
15 ஆண்டுகளாக அவிநாசியில் மனைவி, இருமகள்கள்,ஒரு மகன் ஆகியோருடன் அவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் பிரியங்காவும், அவிநாசி சிவசண்முகம் வீதி பகுதியை சேர்ந்த முகமது யாசின் என்ற இஸ்லாமிய இளைஞரும் நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இதையறிந்த பூராஜா பிரியங்காவை கண்டித்து கோவை சிங்காநல்லூரில் உள்ள தனது தங்கை வீட்டில் பாதுகாத்து வந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் வீட்டை விட்டு வெளியேறி பிரியங்கா முகமது யாசினை திருமணம் செய்துக் கொண்டார். இதனையடுத்து நேற்று கணவர் வீட்டில் அனைவரும் வேலைக்கு சென்று விட பிரியங்கா மட்டும் தனியாக இருந்துள்ளார்.
அப்போது அங்கு மதுபோதையில் வந்த பூராஜா மகள் பிரியங்காவை கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடியுள்ளார். இதில் காயமடைந்த பிரியங்காவை அவரது மாமியார் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து அவிநாசி போலீசார் பிரியங்காவின் தந்தையான பூராஜாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான் காதல் திருமணத்தை வெறுப்பதாகவும் தனது மகள் யாரை காதல் திருமணம் செய்திருந்தாலும் இப்படித்தான் செய்திருப்பேன் என்றும் பூராஜா தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.