கங்கையில் ஒலிம்பிக் பதக்கங்களை வீச சென்ற மல்யுத்த வீராங்கனைகள் - தடுத்து நிறுத்திய விவசாயிகள்
பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பாஜக எம்.பி மீது நடவடிக்கை எடுக்க கோரி புனித நதியாக பார்க்கப்படும் கங்கை நதியில் பதக்கங்களை வீச சென்ற வீரர் மற்றும் வீராங்கனைகளை தடுத்து நிறுத்தினர் விவசாயிகள் மற்றும் பஞ்சாயத்து அமைப்பினர்.
பாஜக எம்பி மீது பாலியல் புகார்
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து கடந்த ஏப்ரல் 23-ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர்.
கடந்த 28ம் தேதி நாடாளுமன்ற புதிய கட்டடம் திறப்பு விழாவையொட்டி நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர்.
அவர்களை போலீசார் தடுத்த நிறுத்தினர் அப்போது இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் வீரர் மற்றும் வீராங்கனைகளை கைது செய்தனர்.
வீராங்கனை பஜ்ரங் புனியா மற்றும் சாக்சி மாலிக் உள்ளிட்டோர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கபடாது என டெல்லி போலீசார் நேற்று தெரிவித்தனர்.
38 நாட்கள் போராட்டத்தை பல்வேறு வடிவங்களில் நடத்தினர் பின்னர் 28ம் தேதி அவர்கள் சட்டத்தை மீறிவிட்டனர். அதனால் அவர்கள் ஜந்தர் மந்தரில் இருந்து அப்புறப்படுத்த வேண்டியதாகிவிட்டது. டெல்லியில் இனி ஜந்தர் மந்தரை தவிர்த்து மற்ற பகுதியில் நடத்தலாம் என போலீசார் தெரிவித்தனர்.
வீராங்கனைகளை தடுத்து நிறுத்திய போலீசார்
இந்த நிலையில் போட்டிகளில் நாட்டிற்காக வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போவதாக அறிவித்து இருந்தனர் மல்யுத்த வீரர்கள்.
அதனை தொடர்ந்து தாங்கள் பெற்ற ஆசிய பதக்கம் மற்றும் உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களை புனித நதியாக கருதப்படும் கங்கை நதியில் வீச சென்ற தகவல் அறிந்து உத்தரகாண்ட் ஹரித்வார் கங்கை நதி பகுதிக்கு சென்ற விவசாய சங்க தலைவர் மற்றும் பஞ்சாயத்து அமைப்பினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் சமரசம் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து மல்யுத்த வீராங்கனைகள் தங்களது பதக்கங்களை கங்கை நதியில் வீசாமல் திரும்பி சென்றனர்.