உழவர்கள் விற்பனையாளர்களாக மாற வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!
உழவர்கள் உற்பத்தியாளர்களாக மட்டுமல்லாமல் விற்பனையாளர்களாகவும் மாற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நெல் உற்பத்தியில் சாதனை
திருச்சி மாவட்டத்தில் வேளாண் சங்கமம் விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் விழாவில் பேசிய அவர், வேளாண் துறையை வளர்க்க நிதி மட்டுமல்ல நீர் வளமும் தேவை.
வேளாண் துறையை வளர்க்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 ஆண்டுகளுக்கு பின் 119 லட்சத்து 96 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.
47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு உற்பத்தியில் சாதனை படைத்துள்ளது. உழவர்கள் நலனுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
ஏற்கனவே ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது.
உழவர்கள் விற்பனையாளர்களாக மாற வேண்டும்
நலத்திட்டங்கள் சரியான பயனாளிகளை சென்றடைய நடவடிக்கை எடுத்து வருகிறோம். காய்கறிகள், பழங்கள் பயிரிடுவதை ஊக்குவித்து வருகிறோம்.
10 ஆண்டு அதிமுக ஆட்சியில் 2.20 லட்சம் வேளாண் மின் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டன. 2 ஆண்டு தி.மு.க. ஆட்சியில் 1.5 லட்சம் வேளாண் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
3 புதிய அரசு வேளாண்மை கல்லூரிகள், தோட்டக்கலை கல்லூரி தொடங்கப்பட்டுள்ளன. அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து வளர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
வேளாண் துறையை சிறந்த துறையாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மாற்றி உள்ளார். வேளாண் துறை மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது.
வேளாண் லாபம் தரும் தொழிலாக இன்றும் முழுமையாக மாறவில்லை. வேளாண்மையில் வருமானத்தை பெருக்க நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும். உழவர்கள் உற்பத்தியாளர்களாக மட்டுமல்லாமல் விற்பனையாளர்களாகவும் மாற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.