முடிவுக்கு வரும் விவசாயிகள் போராட்டம்? - நாளை முக்கிய பேச்சுவார்த்தை

bjp pmmodi farmersprotest farmbill2020
By Petchi Avudaiappan Dec 07, 2021 04:33 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து விவசாயிகள் நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மத்திய பாஜக அரசு இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடிச் சட்டத் திருத்தங்களை கொண்டு வந்தது. அதில் ஒன்று கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள். இதனை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் டெல்லி எல்லையில் ஓராண்டாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அவர்களுடன் இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. ஆனால் இதில் எதிலும் முடிவு கிடைக்காமல் இருந்தது. இதனிடையே கடந்த மாதம் குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு உரையாற்றிய பிரதமர் மோடி யாரும் எதிர்பாராதவிதமாக மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். 

முடிவுக்கு வரும் விவசாயிகள் போராட்டம்? - நாளை முக்கிய பேச்சுவார்த்தை | Farmers Protest Likely To Be Called Off

குளிர்கால கூட்டத்தொடரில் அவை திரும்ப பெறப்படும் என்றும் கூறினார். இதனையடுத்து இந்த வேளாண் சட்ட ரத்து மசோதாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார். பின் ஒருவழியாக மக்களவையிலும், மாநிலங்களவையிலும் ஒரு மனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன் பின்னர் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிடுமாறு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது.

ஆனால் விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெறாமல் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் மற்றும் நிலுவையில் உள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வரை போராட்டம் வாபஸ் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதுமட்டுமின்றி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும், போராட்டத்தில் பலியான விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

இதுதொடர்பாக, மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கவேண்டும் என பிரதமருக்கு விவசாயிகள் சங்கத்தினர் கடிதம் எழுதினர். இந்நிலையில் டெல்லியில் நடைபெறும் போராட்டத்தை வாபஸ் பெற விவசாயிகள் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விவசாயிகளிடம் தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நாளை சம்யுக்த் கிஸான் மோர்ச்சா அமைப்பு நாளை அரசுடன் நடத்த உள்ள பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.