மகளிர் தினத்தையொட்டி டெல்லியில் 40,000 பெண் விவசாயிகள் போராட்டம்!
சர்வதேச பெண்கள் தினமான இன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் 40,000 பெண் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கினர். இந்த போராட்டம் அனைவரின் கவனத்தை தற்போது ஈர்த்துள்ளது. டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் 100 நாட்களுக்கு மேல் தொடர்ந்து நடந்து வருகிறது.
மத்திய அரசு விவசாயிகளிடம் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியது. இருப்பினும், இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை. அதனால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த நவம்பர் மாதம் தொடங்கிய இந்த போராட்டத்தில் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று சர்வதேச பெண்கள் தினமான உலகமெங்கும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பெண் தினமான இன்று பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 40,000 பெண்கள் டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

500 பேருந்துகள், 600 மினி பேருந்துகள், 115 ட்ரக்குகள் என வாகனங்களில் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பெண்கள் டெல்லி எல்லையான சிங்கு, டிக்கிரி, காசிப்பூர் ஆகிய பகுதிகளுக்கு வந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பெண்கள் தினம் என்பதால் அனைத்து போராட்டங்களுக்கும் பெண்கள் தலைமை தாங்கினார்கள். இதனால் டெல்லி விவசாயிகள் போராட்டம் உலக அளவில் மீண்டும் கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.