டெல்லியில் நடைபெறும் போராடத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவு
ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர்.
ஆனால் பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இன்று வரை தீர்வு எட்டப்படாத நிலையில் போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் வேளாண் சட்டம் பேச்பொருளாக இருந்தது. இந்த நிலையில் போராட்டம் முதன்மையாக நடைபெறும் பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கும் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளன.
இந்த நிலையில் ஒன்றிய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாய சங்க பிரதிநிதிகளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.

மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதை தவிர்த்து வேறு அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பாக மட்டுமே பேச்சுவார்த்தை என்பதில் விவசாயிகள் உறுதியாக இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தான் வரும் 26ஆம் தேதியன்று அனைத்து மாநில ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்து மீண்டும் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதை விவசாயிகள் அறிவித்துள்ளனர். அடுத்த மாதம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் விவசாயிகளின் போராட்டத்தை காங்கிரஸ், திமுக. திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முக்கிய பிரச்சனையாக எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.