மோடியை விமர்சித்த டைம் இதழில் விவசாயிகள் போராட்டம் அட்டைப்படம் - சர்ச்சையை ஏற்படுத்துமா?
பிரபல அமெரிக்க மாத இதழான டைம் பத்திரிக்கையில் டெல்லி விவசாயிகள் போராட்டம் அட்டைப் படக் கட்டுரையாக இடம்பெற்றுள்ளது. இது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல மாநில விவசாயிகளும் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசுடனான பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையிலும் முடிவுகள் எட்டப்படாத நிலை உள்ளது.
இதனையடுத்து, தொடர்ந்து 100 நாட்களுக்கும் மேலாக இந்த விவசாயிகளின் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம் பத்திரிக்கை தங்களது மார்ச் மாத இதழின் அட்டைப்படத்தில் டெல்லியில் போராடிவரும் பெண் விவசாயிகள் படத்தை தற்போது வெளியிட்டிருக்கிறது.
ஏற்கனவே வெளிநாட்டு பிரபலங்கள் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்திய உள் விவகாரங்களில் பிறநாடுகள் கருத்து தெரிவிக்க வேண்டாம் என இந்திய அரசு பதிலளித்திருந்தது. டைம் இதழின் இந்த அட்டைப்படம் தற்போது அடுத்த சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. ஏற்படுத்தியிருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் இந்த அட்டைப்படம் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு இதே டைம் இதழ் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து அட்டைப்படம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.